இன்றைய பயனோ நேற்றைய உழைப்பு !
இன்றைய சிறுவா் நாளைய உலகம் !
என்ற பாவலரேறுவின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்றைய மாணவா்களாகிய சிறுவர்கள் தான் நாளைய தமிழகத்தை காத்திட போகின்றவா்கள். நம்பிக்கைக்குரிய தமிழ்த்தலைவா்களாக மலரப் போகின்றவர்கள். அப்படிப்பட்ட மாணவா்கள் தன் சிறு அகவையிலி௫ந்தே தனது தாய், தந்தை, மக்கள், அண்ணன், தம்பி, தங்கை, பாட்டன், முப்பாட்டன் என்று உறவுகளை அறிந்துக் கொள்வது எவ்வாறு அடிப்படைத் தேவையாக இருக்கிறதோ அதை போன்று நாம் யார் நமது மொழி, இனம், தேசம், பண்பாடு என்பது யாவை, நமது சமூகத்தின் வரலாறு எத்தகையது, நமது முன்னோர்கள் நம் சமூகத்திற்கு ஆற்றிய உழைப்பு எப்படிப்பட்டது என்பதையும் அறிந்து கொள்வது அடிப்படைத் தேவையாக உள்ளது. ஏனென்றால் இன்று நம் தமிழ்ச்சமூகம் தனது வரலாற்றை அறியாமல் நம் தமிழ்மொழி, பண்பாடு, நிலம், இயற்கை வளங்கள், மரபு அறிவியல் போன்ற தமிழ்நாட்டின் கூறுகளையெல்லாம் இழந்துக் கொண்டிருகிறது. இதையெல்லாம் மீட்டெடுத்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை அடுத்த தமிழ்த் தலைமுறைகளுக்கு உள்ளது.
எப்படி ஒரு மருத்துவர் மாந்தனின் உடலில் உள்ள உறுப்புகளையும் அதன் செயல்பாடுகளையும் அறிந்திருந்தால் தான் அதில் குறைகள் ஏற்படும் போது அதற்கேற்ப மருத்துவம் செய்து உடல் நலத்தைக் காக்க முடியுமோ, அதைபோன்று தான் நம் தமிழ்த் தலைமுறைனர் நம் முன்னோர்களின் நீண்ட நெடிய வரலாற்றை அறிந்தால் தான் நம் தமிழ்ச்சமூகத்தில் நிலவி வரும் சிகல்களுக்குத் தீர்வு கண்டு உலக அரங்கில் உயர்த்த முடியும். மேற்கண்ட நிலைகளை உணர்ந்து தமிழகப் பெண்கள் செயற்களத்தின் சார்பில் மாணவர்கள், இளைஞர்களிடையே தமிழர்களின் வரலாற்றை பரப்பிட எண்ணினோம். அதைத் தொடர்ந்து தமிழர்களின் வரலாற்றை அறிந்திட "நம் வரலாற்றிவோம்" வரலாற்று வகுப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
முதற்கட்டமாக மயிலாப்பூர் மற்றும் கே.கே. நகர் பகுதிகளில் 40 மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. இதை மேலும் விரிவுப்படுத்திட பலரும் எங்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற தமிழர் வரலாறு வினா விடைப் போட்டியில் கலந்துக்கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் இதற்கான வகுப்புகள் நடைபெற்றால் பயனாக இருக்கும் என்றும் கூறினர். இவ்வாறு பல்வேறு தளங்களிலிருந்து வந்த வேண்டுகோளுக்கு இணங்க "நம் வரலாறறிவோம் " - தமிழர் வரலாறு சிறப்பு வகுப்பு முகாம் நடத்திட முடிவு செய்துள்ளோம். வருங்கால தலைமுறையினருக்காகவும், நமது மண்ணையும் மக்களையும் காத்திடவும் தொடங்கவுள்ள "நம் வரலாறறிவோம் " - வகுப்பில் மாணவர்கள் திரளாக இணைந்திடுங்கள். நம் வரலாற்றை அறிந்து, தெளிந்து தமிழ்ச் சமூகத்தின் இழிநிலைகளை நீக்கி, உலக அரங்கில் உயர்த்த வேண்டும். இத்தகைய உயரிய நோக்கத்தை நிறைவேற்ற மாணவர்கள், இளைஞர்கள் முன்வர வேண்டும். மாந்(மனித)த நேயத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் சாதி, சமய வேறுபாடுகளைக் களைந்து, தமிழர் என்ற ஒற்றுமை உணர்வோடு இணைந்திட வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் மாணவர்கள் இவ்வகுப்பில் இணைந்திட வேண்டும்
கோக், பெப்சி, மிராண்டா, மாசா போன்ற நச்சுக்குடிப்புகள்,
குர்குரே, லேசு, பிங்கோ போன்ற நச்சு நொறுவைகள்,
பான்பராக், புகையிலை, சிகரெட்
போன்ற போதைப் பொருட்கள் ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்போம்!
வருங்கால தலைமுறையினரை காப்போம்!
என்ற முழக்கத்தோடு - சென்னையில் பல இடங்களில் மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் அமைப்பின் சார்பாக வாரம் ஒருமுறை தொடர்ச்சியாக பரப்புரை செய்யப்படுகிறது. மேலும் இதைப்பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 'மாராத்தான் ஓட்டம்' நடைப்பெற்றது. தெருமுனை கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உழைப்பின் அடையாளமாகவும், உழவுத்தொழிலுக்கு அடித்தளமாகவும் இருந்த அனைத்திற்கும் நன்றி செலுத்தும் விழாவாகவும் தமிழர்களால் போற்றப்படும் இப்பொங்கல் விழா தமிழகப் பெண்கள் செயற்களத்தின் சார்பாகவும் ஒவ்வோர் ஆண்டும் சென்னையின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பெண்களுக்கான கோலப்போட்டிகள், விளையாட்டு போட்டிகள், அறிவுப்போட்டிகள் என்று பலமுனைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசும் வழங்கப்படுகின்றன. மேலும் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்பதைப் பற்றியும் இந்நாளில் பொதுமக்களிடம் அறிவுறுத்தப்படுகிறது. நச்சுக் குடிப்புகள், நச்சு நொறுவைகளை மறுக்க வேண்டும் என்றும், இயற்கை வளங்களை காக்க வேண்டும் என்பதைப் பற்றிய சிந்தனைகளையும் பரப்புரை வழி அறிவுறுத்தப்படுகிறது.
திருவள்ளுவர் பிறந்த சுறவம் (தை) முதல் நாளே 'தமிழ்ப்புத்தாண்டு' என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் சுறவம்(தை) முதல் நாளன்று தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் "தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம்" - முன்னெடுக்கப்படுகிறது. இக்கொண்டாட்டத்தில் தமிழர்கள் அனைவரும் கடற்கரையில் குடும்பத்துடன் ஒன்று கூடி ஆட்டம், பாட்டம், விளையாட்டு, பேச்சு என்று மகிழ்ச்சியாக ஒன்று கூடி இனிப்பு வழங்கி பட்டாசு, இசைக் கருவிகள் முழங்க வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புத்தாண்டை வரவேற்கிறோம். இந்நாளில் கடந்த ஆண்டில் இறந்தவர்களை நினவுக் கூர்ந்து அவர்களுக்கு அமைதிவணக்கம் செலுத்தப்படுகிறது. புதியதாக திருமணம் ஆன இணையருக்கு அனைவரும் மலர் தூவி பரிசளித்தும் வாழ்த்தும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு சிறப்பாக தமிழ்க் குடும்பத்திற்குப் பணியாற்றிய பெரியோர்களுக்கு 'தமிழ்சீர்' அளித்து சிறப்பு செய்யப்படும். இறுதியாக அனைவரும் ஒன்று கூடி குடும்பம், குழந்தை நண்பர்களுடன் இணைந்து ஆடும் 'கூட்டு நடனமும்' நடைபெறும்.
தமிழர்களின் மரபுவழிப்பட்டது தமிழர்களின் பண்பாட்டையும் அடையாளத்தையும் பறைசாற்றுவது. தமிழர்களின் தொழிலோடும், வாழ்வியலோடும் தொடர்புடையது. சிந்து வெளி தமிழர் நாகரீகம் என்று அடையாளப்படுத்துவதும் இக்காளைச் சின்னமே! எனவே காளை இனங்கள் அழியாமல் காப்பாற்ற ஏறுதழுவுதலை தடை செய்யாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்! என்ற வேண்டுகோள்களோடு சென்னை மெரினா உழைப்பாளர் சிலையிலிருந்து தொடங்கி கலங்கரை விளக்கத்தில் பேரணி முடிவுற்றது. இதில் அதிகமான அளவில் மாணவர்களும், பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.