தமிழ்மொழி, பண்பாடு, இயற்கை வளங்கள், மரபு அறிவியல் போன்ற தமிழ்நாட்டின் கூறுகளை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை தமிழர்களாகிய நமக்கு உள்ளது. இத்தகைய கடமையைச் செயல்படுத்துவதற்கு அவற்றை பற்றிய தெளிவு அடிப்படைத் தேவையாக உள்ளது. ஒரு மருத்துவர் மாந்தனின் உடலில் உள்ள உறுப்புகளையும் அதன் செயல்பாடுகளையும் அறிந்திருந்தால் தான் அதில் ஏதேனும் குறைகள் ஏற்படும் போது அதற்கேற்ப மருத்துவம் செய்து உடல் நலத்தை காக்க முடியும். அதைப் போன்று தமிழர்களின் வரலாற்றை அறிந்தால் தான் தமிழ்க் குமுகத்தில் நிலவி வரும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு உலக அரங்க்கில் உயர்த்த முடியும். இத்தகைய உயரிய பணியை இன்றைய மாணவச் செல்வங்களிடமும், இளைஞ்சர்களிடமும் ஒப்படைத்தால் மட்டுமே நாளைய தமிழகத்தை காக்க முடியும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்வதற்காக தொடங்கப்பட்டது தான் "தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி". இக்கண்காட்சி 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டு தோறும் சென்னையில் பல பகுதிகளில் 10 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது.
இக்கண்காட்சியில் உலகம் தோன்றியது முதல் ஆங்கிலேயர் காலம் வரையிலான தமிழர்களின் வாழ்க்கை வரலாறுகள், பண்பாடு, கலைகள், மருத்துவம், இசைக்கருவிகள், தொழில்கள், விழாக்கள், இலக்கண இலக்கிய நூல்கள், விளையாட்டுகள், தமிழ்த்தலைவர்கள் போன்ற செய்திகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இக்கண்காட்சிக்கு மாணவர்கள் மட்டும் 10,000 பேர் அளவில் வருகைத் தருகின்றனர். மேலும் இக்கண்காட்சியை பார்வையிட்டு வரும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கண்காட்சியைப் பற்றி கேள்வி கேட்டு பதில் சரியாக சொல்லும் மாணவருகளுக்கு பரிசும் அளிக்கப்பட்டு வருகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் இக்கண்காட்சியை தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் பணி தொடர உள்ளது.