ஒரு குழந்தை சிறு அகவையிலிருந்தே தனது தாய், தந்தை, பாட்டன், முப்பாட்டன் என்று உறவுகளை அறிந்துக் கொள்வது எவ்வாறு அடிப்படைத் தேவையாக இருக்கின்றதோ, அதைப் போன்று நமது மொழி, இனம், தேசம் என்பன யாவை? நமது குமூகத்தின் (சமூகம்) வரலாறு எத்தகையது? நமது முன்னோர்கள் ஆற்றிய உழைப்பு எப்படிப்பட்டது என்பதையும் அறிந்துக் கொள்வது அடிப்படைத் தேவையாக உள்ளது. என்பதை உணர்ந்து தான் "வரலாற்றைப் படிப்போம்!! வரலாற்றைப் படைப்போம்!!" என்ற முழக்கத்தோடு தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் தமிழர் வரலாறு வினா விடைப் போட்டி என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான எழுத்து தேர்வை நடத்தி வருகிறோம்.
தமிழகப் பெண்கள் செயற்களம் மூலமாக வெளியிடப்பட்டுள்ள தமிழர் வரலாறு தொகுதி 1,2,3 ஆகிய மூன்று தொகுதிகளையும் சென்னை மற்றும் திருச்சியிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவயமாகவும்(அரசுப் பள்ளி மட்டும்), குறைந்த தொகைக்கு(மற்ற பள்ளிகளுக்கு) அளித்து அவற்றை படிக்கச் சொல்லி இத்தேர்வில் கலந்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மிகப் பெரிய அளவில் பரிசும் வழங்கி வருகிறோம்.